June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்புழு உரம் தயாரிப்பு தொழில் நுட்ப பயிற்சி

திருவாரூர், ஜூன் 11

திருவாரூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத்திட்டம் (அட்மா) கீழ் தண்டலை ஊராட்சி தியானபுரத்தில் 09.06.2022 அன்று விவசாயிகளுக்கு மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் முனைவர் செல்வமுருகன் கலந்து கொண்டு மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் உற்பத்தி குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். அவர் கூறுகையில் மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாய கழிவுப்பொருட்களான சாணம், இலை, தழை, போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைசத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன. 45 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும். உலகத்தில் மண்புழுக்கள் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. அவற்றில் 6 வகையான மண்புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவையாக தேர்வு செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் உரம் தயாரிக்க சிவப்பு ஊர்ந்தி எனப்படும் ஏய்சினியாபொடிடா, எய்சினியா ஆண்ரியா, யூட்ரில்லஸ் யூஜினியே போன்ற ஆப்பிரிக்கன் வகை மண்புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மண்புழு உரம் உற்பத்தி செய்யும்போது கவனிக்க வேண்டியவைகளில் நிழல் பாங்கான இடம் அல்லது ஓலை கொட்டகை ஏற்ற சூழல் மண்புழு வளர்ப்புக்கு போதுமானது. முதலில் மண்புழுக்களை தேர்வு செய்திடவேண்டும் அவை குறைந்த காலத்தில் விரைவாக மண்புழு உரங்களை தருவதாகவும், மண்புழுக்ளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்கவேண்டும், அதற்கு மேற்கண்ட மண்புழுக்களை பயன்படுத்தலாம் என ஆலோசனைகள் வழங்கினார்.

திருவாரூர் வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் கூறுகையில் விவசாயிகள் இரசாயன உரங்களை குறைத்து இயற்கையில் கிடைக்கும் இலை, தழைகளை கொண்டும், கால்நடை கழிவுகள், மண்புழு உரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை உரங்களை தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் தன்மை மாறமலும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கத்தினை அதிகரிப்பதுடன் நஞ்சில்லா உணவு பொருளை உற்பத்திசெய்து வழங்கிடலாம் என கேட்டுக்கொண்டார்.

பயிற்சியினை வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத்திட்டம் (அட்மா) தொழில்நுட்ப மேலாளர்கள் மதுமிதா மற்றும் தமிழ்பிரியா ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியில் பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கும் பயிற்சியாளருக்கும் தமிழ்பிரியா நன்றி கூறினார்.

Spread the love