August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்வளம் அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர்கள்

பசுந்தாள் உரங்களை நமது விவசாயிகள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இரசாயன உரங்கள் இல்லாத காலத்தில் இயற்கை உரங்களை, குறிப்பாக பசுந்தாள் உரங்களை நம்பியே நம் நாட்டின் வேளாண்மை இருந்து வந்திருக்கிறது. 1960க்குப் பின் உயர் விளைச்சல் ரகங்களும், செயற்கை உரங்களும் அதிகமான அளவில் விவசாயிகளிடம் பரவின. உயர் விளைச்சல் ரகங்கள், இரசாயன உரங்களுக்கு, குறிப்பாகத் தழைச்சத்துக்கு நல்ல பலன் தந்தன. எனவே, விவசாயிகள் இயற்கை உரங்களை இடுவதை கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
சரியான அளவில் இயற்கை உரங்களை இடுவதால் மண்ணின் வளம், பயிரின் உயர் விளைச்சல், தரமான சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இயற்கை உரங்களான தொழுஉரம், கம்போஸ்ட் போன்றவை தேவையான அளவு எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே பசுந்தாள் உரங்களை விவசாயிகள் அவர்களுடைய நிலங்களிலேயே வளர்த்து பயிருக்கு இடுவதன் மூலம் பயிரின் உரத் தேவையை நல்ல முறையில் சமாளிக்கலாம்.

பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரை பயிரிட்டு அதை மடக்கி உழுது நிலத்தில் சேர்ப்பதாகும். இதன் மூலம் காற்றிலுள்ள தழைச்சத்து பசுந்தாள் பயிர்களின் வேர் முடிச்சுகளில் உறிஞ்சப்பட்டு மண்ணுக்குக் கிடைக்கிறது. மேலும் மண்ணின் கீழ் பகுதியிலுள்ள சத்துக்களை மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து பயிருக்கு சத்து கிடைக்க வழி வகை செய்கிறது. மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிப்பதுடன் நன்மை செய்யும் நுண்ணியிர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. பசுந்தாள் பயிர்கள் பயிரிடுவதால் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பு குறைகிறது. அனைத்து வகையான பயிர் சாகுபடியிலும் விதைப்பதற்கு முன் பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்து மண்ணில் உழுது விடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்க முடியும்.

பசுந்தாள் பயிர்கள்

  1. தக்கைப்பூண்டு

களிமண் பாங்கான பூமிக்கு இது மிகச் சிறந்தபசுந்தாள் பயிராகும். முக்கியமாக களர் நிலங்களைச் சீராக்குவதில் இதன் பங்கு இன்றியமையாதது. இது வேகமாக வளரக் கூடியது. தண்ணீர் தேக்கத்தையும்,வறட்சியையும் ஓரளவுதாங்கிவளரும். ஒருஎக்டருக்கு 20 கிலோவிதையைஉபயோகிக்கலாம். இதனை 45 – 50 நாட்களில் மடக்கி உழுது எருவாக உபயோகித்துக் கொள்ளலாம்.

  1. மணிலா அகத்தி

செஸ்பேனியாரோஸ்ட்ரெட்டா எனப்படும் மணிலா அகத்தி வேர்ப் பாகத்துடன், தண்டுப் பாகத்திலும் வேர் முடிச்சுகளைக் கொண்டுள்ளது. நீர் தேக்கமுள்ள நெல் பயிரிடும் நன்செய் நிலங்களில், நன்றாக வளர்ந்து, காற்றிலுள்ள அதிகத் தழைச்சத்தினைக் கிரகித்து, தனது தண்டு மற்றும் வேர் முடிச்சுகளில் தேக்கி, மக்கிய பிறகு விரைவாக நெல்லுக்குத் தரும் தன்மையுடையது. கோடைப் பருவத்தில் இதன் வளர்ச்சி அதிகம். நெல் வயலில் வரப்புகளின் ஓரங்களிலும், இரண்டு பயிர்களுக்கு இடையேயுள்ள குறுகிய காலத்தில் தனிப் பயிராகவும் பயிரிட்டு, மடக்கி உழுது விடலாம்.

  1. சணப்பை
    சணப்பை மிக வேகமாக வளரக் கூடியது. இப்பயிர் தழை உரத்திற்காகவும், இதிலிருந்து கிடைக்கக்கூடிய நாருக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதை 45 நாட்களில் மடக்கி உழுது தழை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். நெல், கரும்பு, ராகி, சோளம், கோதுமை போன்ற பயிர்களுக்கு சணப்பை ஏற்ற பசுந்தாள் உரப்பயிராகும். 25 கிலோ விதையை ஒரு எக்டருக்குப் பயன்படுத்தலாம். இது தீவனப்பயிராகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை மரப் பயிர்களுக்குஅடியிலும், இடையேயும் வளர்த்து மடக்கி உழுதும் பயன் பெறலாம்.
  2. கொளுஞ்சி
    மணற்பாங்கான நிலங்களில் இதன் வளர்ச்சி நன்கு காணப்படுகின்றது. வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. ஒரு முறை விதை விதைத்தால் வளர்ந்த பயிரிலிருந்து சிதறி முளைக்கும் விதைகளால் அடுத்தடுத்த பருவங்களிலும் இந்தப் பயர் தொடர்ந்து முளைக்கும் தன்மையுடையது. மாடு மேயாததால் இதனை கோடைப் பருவத்தில் வயலில் தானே வளர்வதும் இதன் சிறப்பாகும்.
  3. நரிப்பயிறு
    இதனை தானியப் பயிராகவும், மாட்டுத் தீவனமாகவும், எருவாகவும் பயன்படுத்தலாம். பயிர் நன்கு வளர்ந்ததும் ஓரிரு முறை வெட்டி விட்டு தீவனமாகப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் தழை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக களி மண் பாங்கான நெல் தரிசு நிலங்களில் இந்தப் பயிர் நன்றாகவளர்ந்து அதிகப் பசுந்தாள் கொடுக்கக்கூடியது. இதனை நெல் அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு,பயிரின் இடையில் ஒர் தொடர் பயிராகவும் விதைக்கலாம். ஒரு எக்டருக்கு 15 கிலோ விதை தேவைப்படும். இது எக்டருக்கு 8-10 டன் வரை தழையைக் கொடுக்கக் கூடியது.

பசுந்தாள் உரங்களின் சிறப்புகள்
· தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவதால் மண்ணின் வளத்தைப் பாதுகாக்கிறது.
· எளிதில் மக்கும் தன்மைஉடையது.
· மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவிக்கிறது. இதனால் பயிருக்குத் தேவையானஉணவுப் பொருட்கள் விரைவில் கிடைக்க ஏதுவாகிறது.
· மண்ணின் கட்டமைப்பையும் நன்றாகச் சீராக்குகிறது. அதன் மூலம் மண்ணிற்கு அதிக அளவு நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் ஏற்படுத்துகிறது.
· பயிருக்குத் தேவையான சத்துக்களை மண்ணின் அடிப்பாகத்திலிருந்து மேற்பகுதிக்குக் கொண்டு வருவதால், மண்ணின் வளம் நீடிக்கப் பயன்படுகிறது.

மேற்கண்டவாறு மண்வளம் அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு பயன் பெற கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஷீபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Spread the love