வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை
விருதுநகர், மே 4
மண்ணில் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவிலும், குறிப்பிட்ட விகிதத்திலும் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையிலும் இருப்பதுடன் அதிக கார, அமில நிலை, உவர் நிலை இல்லாமல் நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். எனினும் உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதால் அதிகளவு சத்துக்கள் பயிர்களால் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் சத்துக்கள் அளவு குறைந்து விடுகிறது. ரசாய உரங்கள் மட்டும் அதிகளவில் தொடர்ந்து பயிர்களுக்கு இடுவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது.
அங்கக உரங்களான தொழுஉரம், பசுந்தாள் உரம், தழை உரம் ஆகியவற்றை போதிய அளவு இடாத காரணத்தால் மண்வளம் குறைந்து விடுகிறது, போதிய அளவு வடிகால் வசதி இல்லாத பள்ளக்கால் பகுதிகளில் மண்ணானது களர், உவர் தன்மை ஏற்பட்டு சாகுபடிக்கு லாயக்கற்றதாக மாறி விடுகிறது. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக் கொல்லிகள் நிலத்தில் அதிக அளவில் இடுவதால் மண்ணுக்கு வளம் சேர்க்கும் நுண்ணுயிர்கள் குறைந்து விடுகிறது. அதிக விளைச்சல் பெற அதிக உரம் இடுவதாவும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
பயிர்களில் நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீசு, தாமிரம் குறைபாடு ஏற்படும் போது அவற்றை நிவர்த்தி செய்ய மண் வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட துத்தநாக சல்பேட், இரும்பு சல்பேட், போராக்ஸ், மாங்கனீசு சல்பேட், தாமிர சல்பேட் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண் பரிசோதனை நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையங்களில் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்யும் பகுதிகளிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்து கொடுத்து மண்ணை ஆய்வு செய்யலாம். மண் ஆய்வு செய்வதற்கு ஆய்வுக் கட்டணமாக ரூ.20/- மட்டும் செலுத்த வேண்டும். மண் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் மண்வள அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த அட்டையில் மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்து பயிர்களுக்குத் தேவையான அளவில் உரமிட வேண்டும். மண்ணில் உள்ள களர், அமில, உவர் மற்றும் சுண்ணாம்பு தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்வதுடன் தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச்செலவு குறைவதுடன் அதிக மகசூல் பெற முடியும்.