மதுரை, மே 5
லாபகரமான விவசாயத்திற்கு அடிப்படையானது, மண்வளம், நீா்வளம், தரமான விதைகள் மற்றும் சரியான பருவம் ஆகும். விவசாயிகள் ஒரே வகை பயிர்களை பயிரிடுவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்த்து மண் வளம் காக்க பயிர் சுழற்சி முறையை விவசாயிகள் மேற்கொள்ளலாம் என விதைப்பரிசோதனை அலுவலர் ம.மகாலட்சுமி தெரிவிக்கிறார். பயிர்ச்சுழற்சி (crop rotation) என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறையாகும். பயிர் சுழற்சி செய்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாது களை செடிகளையும் கட்டுப்படுத்தலாம். மேலும் பூச்சி நோய் தாக்குதலை குறைக்க ஏதுவாகிறது. இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறை ஆகும். முதல் பருவத்தில் நெல், அடுத்தப் பருவத்தில் உளுந்து என மாறிமாறி பயிரிடும் பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடுகிறது.
தானியப் பயிர்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சணப்பை, நெல். பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எள், கடலை போன்ற பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி விடுகின்றன. எனவே இப்பயிர்களை பயிரிட்ட பின் பயறு வகைகளைப் பயிரிட்டால்அவை சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்துகின்றன.