June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண் வளம் பாதுகாக்க தொழில்நுட்ப ஆலோசனை

மகத்தான மகசூலுக்கு நல்ல மண் வளமே அடித்தளம் ஆகும். மண்வளத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கடலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் எ.பிரேமலதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மூடு பயிர், ஊடு பயிர், மூடாக்கு தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதால், மண்ணின் வெப்பம் கோடைகாலத்தில் ஓரளவிற்கு தடுக்கப்பட்டு, மண்ணின் ஈரப்பதம் நிலைப்படுத்தப்படுகிறது. மண்வளம் என்பது மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கையை பொருத்தும், மண்ணில் எஞ்சியுள்ள தாவர ஊட்டச்சத்துகளின் அளவை பொருத்தும் அறியப்படுகிறது. மூடுபயிர்கள், பயறுவகைப் பயிர்களாகவோ அல்லது வேறு வகையாகவோ இருக்கலாம். தட்டைப்பயறு, நரிப்பயறு, கொள்ளு, பாசிப்பயறு போன்றவை மூடு பயிர்களாக பயன்படுத்தலாம். நிலப்போர்வை அல்லது மூடாக்கு என்பது, மண்ணில் சூரிய ஒளி நேரடியாகப் படுவதை தவிர்த்திடும் ஓர் ஆயுதம் ஆகும். அவை தாவரங்களின் கழிவுகளாகவே இருக்கலாம். தாவர கழிவுகள் ஓர் குறிப்பிட்ட காலம் வரை போர்வையாகயும் பிறகு மட்கிய பின் மட்கு உரமாகவும் பயன்படும் தன்மையுடையது.

பல பயிர் என்பது, ஒரே வயலில் ஏழுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாக விதைத்து, அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண்ணின் வளம் பெருகும். கோடையின் இறுதியில் பருவப் பயிர்க்கு முந்தைய காலத்தில் கிடைக்கப் பெறும் இடைக் காலத்தில், பசுந்தழை பயிர்களை பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது, அடுத்த பயிருக்கு உரமாக்குவது அங்கக வேளாண்மையின் சிறந்ததொரு தொழில்நுட்பம். இந்த முறையால் மண்ணின் வளம் கோடைகாலத்தில் காப்பதோடு, அடுத்தப் பயிருக்கு தேவையான தாவரச் சத்துக்கள் எளிதில் கிடைக்க செய்யும் தொழில்நுட்பமாகும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love