புதுக்கோட்டை, ஏப்.15
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், கீழப்பனையூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் – மண் வள அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் இரா.சிவக்குமார் தலைமை வகித்து மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும், மண் வள அட்டையின் முக்கியத்துவம் பற்றியும், மண் பரிசோதனை ஆய்வு முடிவின் அடிப்படையில் உரமிடுவதால் ஏற்படும் நன்மைகள், இலை வண்ண அட்டையின் பயன்பாடு ஆகியன குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
அரிமளம் ஒன்றியத்தின் தலைவர் மேகலா முத்து, அட்மா-விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் கணேசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) மதியழகன், பயிர் சாகுபடியில் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) வீ.ரெங்கசாமி இவர்களை வரவேற்று பேசினார்.
மண் பரிசோதனை செய்வதற்காக மண் மாதிரிகள் சமர்ப்பித்திருந்த விவசாயிகளுக்கு இந்த பயிற்சியின் போது மண் வள அட்டை வழங்கப்பட்டன. மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்களின் சாகுபடியில் நுண்ணூட்டச்சத்துக்களின் பயன்பாடு குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.