August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண் வள மேலாண்மையில் பசுந்தாள் உரப் பயிர்களின் பயன்பாடு

விருதுநகர், ஜூலை 13

நீடித்த நிலையான வேளாண்மையில் நிலத்தின் கரிம வளத்தினை மேம்படுத்தி, நுண்ணுயிர்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்து, மண் வளத்தினைக் காப்பதில் பசுந்தாள் உரப் பயிர்களின் பங்கு இன்றியமையாததாகும்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி பரப்பு சுமார் 700 எக்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் சாகுபடி செய்யப் போகும் வயல்களில் பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை, கொளிஞ்சி, தட்டைப் பயறு, நரிப்பயறு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைத்து, 45 நாட்களுக்குப் பின், நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது மடக்கி உழுவதால் மண்ணின் வளம், பயிரின் உயர் விளைச்சல், தரமான சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பாதுகாக்கப்படுவதுடன், நிலத்தில் எளிதில் மக்கி, மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவித்து, மண் கட்டமைப்பை சீராக்குகிறது. அதன் மூலம் மண்ணிற்கு அதிக அளவு நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது.
மேலும் களர் நில சீர்திருத்ததிலும் பசுந்தாள் உரப் பயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுவாக பசுந்தாள் உரப் பயிர்களை எந்தப் பருவத்திலும் விதைப்பு செய்யலாம். விதைக்கும் பொழுது போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஆகவே சிவகாசி வட்டார விவசாயிகள் மண்ணின் பாங்கு, தட்பவெப்ப நிலை, பயிர்சுழற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பசுந்தாள் பயிர்களை ஒவ்வொரு ஆண்டும் வளர்த்து மண் வளத்தினை பேணி, விளைச்சலையும் பெருக்கிட வேண்டுமாய் சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் க.பா.இரவி கேட்டுக் கொண்டார்.

Spread the love