வேளாண்மைத் துறை தகவல்
மதுரை, மே 20
நெல் இருபோக சாகுபடிக்கு பெரியார், வைகை கால்வாயில் ஜுன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
பெரியார் அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பெரியார் அணையின் நீர் மட்டம் 130.15 அடியாகவும், வைகை அணையின் நீர் மட்டம் 63.32 அடியாகவும் உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நெல் இருபோக சாகுபடிக்கு சென்ற ஆண்டு 31.08.2020 அன்றுதான் பாசனத்திற்காக தண்ணர் திறந்து விடப்பட்டது. தற்போது இரண்டு அணைகளிலும் உள்ள நீர் மட்டத்தால் நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜுன் முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
உழவு பணி தயார் செய்தல், விதை இருப்பு, நெல் இரகம் தேர்வு செய்தல், நாற்றாங்கால் தயார் செய்தல் : மதுரை மாவட்டத்தில் தற்போது பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி தரிசாக உள்ள நிலங்களில் கோடை உழவு செய்து களைச்செடிகளை அகற்றி, மழைநீரை சேகரிப்பதுடன் மண்ணின் தன்மையை மேம்படுத்தலாம்.
விதை இருப்பு : மதுரை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பு இலக்கு 3300 ஹெக்டேர், சம்பா பருவத்திற்கு 43900 ஹெக்டேர், கோடை பருவத்திற்கு 5300 ஹெக்டேர் ஆக மொத்தம் நடப்பு ஆண்டிற்கு நெல் சாகுபடி பரப்பு 52500 ஹெக்டேர் இலக்கு, சிறுதானியத்தில் ஆண்டுக்கு 33100 ஹெக்டேரும் பயறுவகைகளில் 11500 ஹெக்டேரும் ஆகமொத்தம் உணவு தானியப் பயிர்களில் மொத்தம் 97100 ஹெக்டேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தி நெல்லில் 2.532 லட்சம் மெட்ரிக் டனனும், சிறுதானியத்தில் 1.435 லட்சம் மெட்ரிக் டன்னும் பயறு வகையில் 0.100 லட்சம் மெட்ரிக் டன்னும் ஆகமொத்தம் 4.067 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனை சாதனை அடையும் நோக்கில் வேளாண்மைத் துறையிலிருந்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு மூலம் விதைகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு, நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தி சாதனை அடையும் பொருட்டு வேளாண்தை துறை அலுவலர்களால் முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நெல் குறுவை பருவத்தில் அதிகபட்சமாக 3565 ஹெக்டேர் நடவாகும். இதுவரை 465 ஹெக்டேர் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் குறுவை பருவத்திற்கு 3300 ஹெக்டேருக்கு தேவையான நெல் விதை அளவு 165 மெட்ரிக் டன் ஆகும். திருந்திய நெல் சாகுபடி முறையில் ஹெக்டேருக்கு 8 கிலோ நெல் விதையும், சாதாரண முறையில் ஹெக்டேருக்கு 50 கிலோ நெல் விதையும் தேவைப்படும். இதில் 173 மெட்ரிக் டன் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் மட்டும் குறுகிய கால வித்துக்களான ஏ.எஸ்.டி 16, கோ 51, டி.கே.எம் 13 போன்ற இரகங்கள் உள்ளது. இதை தவிர மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களான 6 5204, டே 1798 பு 34449 ஆகிய இரகங்கள் சேர்ந்து மொத்தம் 110 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 283 மெட்ரிக் டன் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பிலுள்ளது.
இதைத் தவிர தனியார், விதை விற்பனை நிலையங்களில் நெல் குறுகிய கால வித்துக்களான ஏ.டி.டி 36, ஏ.டி.டி 37, ஏ.டி.டி 43, ஏ.டி.டி 45. எ.எஸ்.டி 16 கோ 51, ஆகிய இரகங்கள் சேர்ந்து 172 மெட்ரிக் டன் உள்ளது. மேலும் மத்திய மற்றும் நீண்ட கால இரகங்கள் 95 மெட்ரிக் டன்னும் ஆகமொத்தம் 267 மெட்ரிக் டன் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது. விவசாயிகள் மேற்சொன்ன விதை விற்பனை நிலையங்களில் விதைகளை பெற்று கிணறு உள்ள விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்ய ஆரம்பிக்கலாம்.
ஏக்கருக்கு குறுகிய கால நெல் விதைகள் 20 கிலோ பயன்படுத்தவும். நாற்று பாவுவதற்கு முன்பாக 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிவிரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கலந்து விதைநேர்த்தி மற்றும் உயிர் உரம் நேர்த்தி செய்து பின்பு விதைக்கலாம்.
உரம் இருப்பு : மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் சேர்ந்து மொத்தம் யூரியா 3556 மெட்ரிக் டன் டிஏபி 588 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1387, மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3783 மெட்ரிக் டன், சூப்பர்பாஸ்பேட் 298 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது. இது குறுவை சாகுபடி, காரிப் பருவ ஆரம்பகால பயிர்களுக்கு உர தேவை போதுமானதாகும்.
நடவு வயல் பரமாரிப்பு : நடவு வயல்களில் வரப்புகளை வெட்டி களிமன் பூசிவிடுவதன் முலம் எலி நடமாட்டத்தை கண்டுபிடிக்கலாம். நெல் வயல் வரப்புகளில் உளுந்து, பாசி, தட்டைப்பயறு விதைகளை விதைப்பதன் முலம் கூடுதல் வருவாய் பெறுவதுடன், மண் வளம் பெருகவும், நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து பயிர்க்கடன் பெற அருகில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். நெல் நடவு செய்யும் போது திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடை பிடித்து, இயந்திர நடவு / வரிசை நடவு செய்து, கோனோவீடர் மூலம் களையெடுத்து, மண் பரிசோதனையின்படி உரமிட்டு, 15 – 20 சதம் கூடுதல் மகசூல் பெற்று, நிகர இலாபத்தினை அதிகரிக்குமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.