September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களால் நிதி தொழில்நுட்ப சந்தைமதிப்பு உயரும்: அமைச்சர்

புது தில்லி, செப்.9

மத்திய அரசின் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களால், நிதிதொழில்நுட்ப சந்தை, 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, ரூ.6,20,700 கோடியாக உயரும் என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் அசோசெம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் பகவத் காரத் இது குறித்து தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், மின்னணு தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது. இதனால், வளரும் நாடுகளில் நிதிதொழில்நுட்ப பயன்பாட்டில், இந்தியா, குறுகிய காலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது என்றார்.

மேலும், உலக நாடுகளின் நிதிதொழில்நுட்ப பயன்பாட்டு வளர்ச்சி, சராசரியாக, 64 சதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில், 87 சதமாக உயர்ந்து காணப்படுகிறது. கடந்த 2019ல், நாட்டின் நிதிதொழில்நுட்ப சந்தை மதிப்பு, ரூ.1,920 கோடியாக இருந்தது. இது, மூன்று மடங்கு உயர்ந்து, 2025ல், ரூ.6,20,700 கோடியாக அதிகரிக்கும் என்றும், இதனால், நிதிதொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஏராளமான வல்லுனர்கள் உருவாகுவர். இதன் காரணமாக, நிதிதொழில்நுட்பத்தின் மையமாக, இந்தியா உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிதிதொழில்நுட்ப துறையில் உள்ளன. இந்நிறுவனங்கள், இணையம் வழியே நிதிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை சுலபமாக மேற்கொள்ள உதவுகின்றன. “மொபிக்விக், பேடிஎம், பேபால்’ போன்ற நிறுவனங்ளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

Spread the love