June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மத்திய அரசு நெல் கொள்முதல் 08.50 கோடி டன் இலக்கு

தமிழகத்தில் கொள்முதல் இலக்கு குறித்து தெளிவுபடுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் : பிஆர் பாண்டியன் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.15

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சென்னை மண்டல தலைவர் சைதை சிவா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர்
பிஆர் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழகத்தில் வேளாண் தொழிலை ஊக்கப்படுத்த இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், பாரம்பரிய விவசாய முறைகள் குறித்து தொழில்நுட்பங்களை அறிந்து கொள்கிற வகையில் வருகிற ஜூன் 3, 4, 5 தேதிகளில் சென்னையில் கருத்தரங்கம், மாநாடு, உணவு திருவிழா, வேளாண் இயந்திர கண்காட்சி நடத்த உள்ளோம். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். ஆய்வாளர்கள் அறிஞர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

தமிழகத்தில் நெல் கொள்முதல் தொடர்ந்து குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் துயரத்தில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வெளிப்படையாக சொல்லமுடியாத வகையில் முறைகேடுகள் அரசியல் தலையீடுகள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் கோடை குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. அடிப்படை காரணம் கோடை குருவை குறித்து விஷம பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டது. கொள்முதலை தமிழக அரசு கைவிட போவதாக விவசாயிகள் மிரட்டப்பட்டனர். இதனால் அஞ்சி அஞ்சி விவசாயிகள் சாகுபடியை குறைத்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசாங்கம் வரும் நிதியாண்டில் அக்டோபர் துவங்கி 2023 செப்டம்பர் வரையிலும் 8.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய உள்ளதாக இலக்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த காலங்களில் அதிக கொள்முதல் செய்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை என தெரியவருகிறது. உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடிக்கும் நிலையில் கொள்முதலில் பின்தங்கி இருப்பது மிகுந்த சந்தேகம் அளிக்கிறது. எனவே தமிழக அரசின் கொள்முதல் குறித்து வெளிப்படையான கொள்கை நிலையை தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.

தச்சூர்-சித்தூர் சாலையை மாற்றி கொசஸ்தலை-ஆரணி ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

திமுக தனது தேர்தல்அறிக்கையில் சென்னை-சேலம் எட்டு வழி சாலையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு விவசாயிகள் கருத்தறிந்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பது திமுக கொள்கைக்கு முரணாக உள்ளது.

இது குறித்து தனது கொள்கையை தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்துவதோடு திட்டத்தை கைவிடவேண்டும்.

முல்லைப் பெரியாறு உரிமைக்காக ஏப்ரல் 30ம் தேதி கேரளம் செல்லும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட அறிவிப்பு செய்திருந்தோம். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்கால தீர்ப்பை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் கொள்முதலில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து வரும் 22ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர் என்றார்.

கூட்டத்தில் மாநில பொருளாளர் நாகை
எஸ் ஸ்ரீதர், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் தஞ்சை எல்.பழனியப்பன்,
மதுரை மண்டல கௌரவத் தலைவர் திருபுவனம் ஆதிமூலம், நாகை மாவட்ட செயலாளர் எஸ் ராமதாஸ், திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தில்லி ராம், மாவட்ட செயலாளர் ராஜசேகர், சென்னை மண்டல துணை தலைவர் திருவள்ளூர் வெங்கடாதிரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு, மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண், மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், எம் கோவிந்தராஜ், அகஸ்டின் எம் தெய்வமணி, தஞ்சை ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


Spread the love