August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மரத்தில் வீணாகும் பலாப்பழங்கள் விவசாயிகள் வேதனை

கடலூர், மே 8

பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து வீணாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அறுவடை செய்ய முடியாமல் மரத்திலேயே பலாப்பழங்கள் வெடித்து வீணாகின்றன. செம்மண் பூமியான பண்ருட்டி, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் துவங்கி, மே மாதம் வரை பலாப்பழ சீசன் ஆகும். இந்த காலங்களில் கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அங்கிருந்த மொத்த வியாபாரிகள் ஆண்டுதோறும் வந்து பலாப்பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்வர். உள்ளூர் வியாபாரிகள், பலா மரங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வர்.
இந்நிலையில், பலாப்பழம் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால், பலாப்பழங்கள் மரத்திலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சேடப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக பலாப்பழங்களை வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை. அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம். அந்த பழங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், சுற்றுப்பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். ஆனாலும், முழுமையாக விற்பனையாவதில்லை. ஆயிரக்கணக்கில் பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி வருகின்றன. இதனால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பலாப்பழங்களை அறுவடை செய்யவும், இங்கிருந்து தடையின்றி வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Spread the love