July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மரவள்ளிக் கிழங்கு செடியில் மாவுப்பூச்சி தாக்குதல்

நாமக்கல், ஜூலை 21

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு பயிரில் செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், வெண்ணந்தூர், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஹெக்டேரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜேடர்பாளையம், தொப்பப்பட்டி, அரி்யாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பேளுக்குறிச்சி, புதுப்பட்டி போன்ற பகுதிகளில் அதிகளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு, அப்பளம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இப்பகுதிகளிலிருந்து மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. ரோஸ், குங்குமம், வெள்ளை தாய்லாந்து போன்ற வகை கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பெரும்பாலும் மானாவாரியாக பயிரிடப்படும் மரவள்ளிக் கிழங்கு செடியில் ஆண்டுதோறும் மாவுப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சித் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

நிகழாண்டில் இச்செடிகளில் செம்பேன் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 10 மாத பயிரான மரவள்ளி செடியில் பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதால், கிழங்கு உற்பத்தி பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மருந்துகள் தெளித்தும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், தோட்டக்கலைத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Spread the love