சேலம், மே 5
சேலம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் அடங்கிய குழு மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில், மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மல்லூர், வெண்ணந்தூர், ராசிபுரம், மல்லசமுத்திரம் பகுதிகளில், பரிசோதனைக்கு மாவுப்பூச்சி மாதிரிகளை சேகரித்தனர்.
இதுகுறித்து, வேளாண் விஞ்ஞானிகள் கூறுகையில், நோய் தாக்கிய மரவள்ளி பயிரின் நுனி குருத்துகளை அகற்றுதல், முற்றிலும் பாதிக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும். ஆரம்ப நிலையில், ஒரு லிட்டர் நீரில், அசாடிராக்ட்டின், 0.15 சதவீதம் கலந்து தெளிக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகமாக இருந்தால், ஒரு லிட்டர் நீரில், பிலோனிக்காமிட், 50 டபியுஜி, 0.30 கிராம் அல்லது தயாமீதாக்சாம், 25 டபியுஜி, 0.50 கிராம் அல்லது ஸ்பைரோடேற்றாமேட், 150 ஒ.டி., 1.25 மி.லி., கலந்து, கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். செடிகளின் அனைத்து பாகங்கள், வயல், வரப்பு செடிகள், களைகள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என அவர்கள் கூறினர். வயல் ஆய்வில், மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் ஈடுபட்டனர்.