புது தில்லி, ஏப்.23
சமீபத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் கோவிட்-19 நிலவரம் குறித்த உயர்நிலைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
கோவிட் தொற்றின் முதலாவது அலையின் போது, இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய அடிப்படையாக இருந்தது நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் யுக்திகள் என அவர் கூறினார். அதேபோல், இந்த சவாலையும் தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த போராட்டத்தில், அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு முழு ஆதரவை அளிக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். சுகாதாரத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும், மாநிலங்களுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் விநியோகம் பற்றி, மாநிலங்கள் தெரிவித்த விசயங்களை பிரதமர் மோடி குறித்துக் கொண்டார். ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள் இணைந்து செயல்படுகின்றன.மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான தேவைகளை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மாநிலத்தின் பல மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல, உயர்நிலை ஒழுங்கிணைப்பு குழுவை உருவாக்க வேண்டும் என மாநிலங்களை பிரதமர் வலியுறுத்தினார். மத்திய அரசின் ஒதுக்கீடு கிடைத்ததும், இந்த ஒருங்கிணைப்பு குழு, மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப உடனடியாக அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளின் பயண நேரத்தை குறைக்க முடிந்த அளவு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இதற்காக, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே தொடங்கியுள்ளது. காலி ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லும் பயண நேரத்தை குறைக்க, விமானப்படை விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க தொடங்கப்பட்ட பிரச்சாரம் அதே வழியில் தொடர்கிறது. மே 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதுடன், மருத்தவமனைகளின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சமீபத்தில் நடந்த ஆக்ஸிஜன் கசிவு, மருத்துவமனைகளில் நடந்த தீ விபத்து சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்காத வகையில், நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாடு முழுவதும் கொவிட் தொற்றின் இரண்டாவது அலையையும், நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என அவர் கூறினார்.