மும்பை, மே 6
நாட்டில் கோவிட் பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உருவெடுத்துவருகிறது.
இந்நிலையில், முன்னணி உட்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட்டி ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய 22 ஜெனரேட்டர்களை மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் செய்தியாவது: இந்த ஜெனரேட்டர்கள் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துமருத்துவமனையில் குழாய்கள் வழியாக நோய் பிரிவு அறைகளுக்குக் கொண்டு செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல் அண்ட் டி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, எஸ்.என்.சுப்ரமண்யம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
முற்றிலும் எதிர்பாராத நெருக்கடி நிலையில் இருக்கிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஏற்படுகிற உயிரிழப்புகளைப் பார்க்கையில் மிகுந்த வலி உண்டாகிறது. எனவே எல் அண்ட் டி நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்களை உருவாக்கும் முயற்சியிலும், ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புக்கான உபகரணங்களைத் தயார் செய்வதிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறது.
மேலும், இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 22 ஆக்சிஜன் ஜெனரேட்டர் யூனிட்டுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், முதல்கட்டமாக 9 ஜெனரெட்டர்கள் மே 9ம் தேதி இந்தியா வந்து சேரும் என்றும், மே 15-க்குப் பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு இவை தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.