August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஆர்பிஐ வலியுறுத்தல்

மும்பை, மே 8

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்குக் கடனளிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு ரெப்போ வட்டி விகிதத்தில் கடன் வழங்க ரூ.50,000 கோடியை ஒதுக்கி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், அந்நிறுவனங்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை இந்த சிறப்புத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆர்பிஐ-யிடமிருந்து தொகையைப் பெற்று நிறுவனங்களுக்கு வங்கிகள் கடனளிக்கலாம்.

இந்நிலையில், ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், சிறப்புத் திட்டத்தின் கீழ் நிதியைப் பெறுவதற்கு வங்கிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது ஆர்பிஐ-யின் கையிருப்புக்கு ஏற்ப நிதி வழங்கப்படும். திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.50,000 கோடி வரை மட்டுமே நிதி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியை மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு 30 நாள்களுக்குள் வங்கிகள் கடனாக வழங்க வேண்டும். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்கள், கோவிட் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்குக் கடனுதவி வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்க விரும்பும் வங்கிகள்,ஆர்பிஐ-யிடமிருந்து நிதியைப் பெறாமல் சொந்த நிதியைப் பயன்படுத்தியும் கடன் வழங்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love