June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மருந்து, வாசனை மற்றும் மணமூட்டும் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகள்

மருந்து, வாசனை திரவிய மற்றும் மண மூட்டும் பயிர்கள் மருந்து தயாரிப்பதற்கும் சமையலுக்கும் மேலும் வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்வதற்கும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி ஊக்கிகள் இப்பயிர்களில் இனவிருத்தி செய்வதற்கும் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் செல்களில் இரண்டாந் தர வளர்சிதை மாற்றத்தை தூண்ட செய்து மருந்து பொருட்களின் அளவையும் மண மூட்டும் தன்மையையும் அதிகரிக்க செய்கிறது.

மிளகு

மிளகு சாகுபடியில் நாற்று உற்பத்தியில் இன்டோல்பியூட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. தாய் கொடியிலிருந்து எடுக்கப்பட்ட குச்சிகளில் இலைகளை பறிக்காமல் அவற்றை 200 பிபிஎம் கரைசலில் அடிப்பாகத்தை நன்கு நனையுமாறு செய்து நடவு செய்வதால் 82-84 சதவித குச்சிகள் முளைப்பு திறன் பெறுகின்றன. குச்சிகள் நடவு செய்த 21 நாட்களிலேயே 50 சதவித குச்சிகளில் வேர் வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.

இளநீரை கொண்டும் வேர் வளர்ச்சியை துரிதப்படுத்தலாம். சுமார் 250 மிலி நல்ல தரமான இளநீரில் 750 மிலி தண்ணீர் சேர்த்து கிடைக்க கூடிய கலவையில் குச்சிகளை 12 மணிநேரம் மூழ்கவைத்து பின்பு நடவு செய்வதால் குச்சிகளில் வேர்கள் நல்ல வளர்ச்சியுடனும் நீளமாகவும் இருக்கிறது. இப்பயிரில் உள்ள பூங்கொத்தில் பூக்கள் உதிராமல் காய்கள் பிடிக்க 2.4 டி 10 பிபிஎம் தெளிக்கலாம். இவ்வாறு தெளிப்பதால் 85 சதவித பூக்கள் காய்களாக மாறுகிறது. அதோடு மட்டுமல்லாமல் மிளகுகளின் எண்ணிக்கையும் எடையும் அளவும் அதிகரிப்பதால் மகசூலும் அதிகரிக்கிறது.

கிராம்பு

கிராம்பு செடிகளை 50 சதவித நிழல் பகுதிகளில் சாகுபடி செய்வதால் செடிகளின் வளர்ச்சி சீராக உள்ளது. மிக்ஸடால் 1 பிபிஎம் கரைசல் தெளிப்பதால் கிராம்பு இலைகளில் ஒளிசேர்க்கை அதிகமாகி மகசூலும் அதிகரிக்கிறது.

இஞ்சி

இஞ்சி மட்டத் தண்டு கிழங்குகளை (ரைசோம்) 250 பிபிஎம் சைக்கோசல் கரைசலில் மூழ்கவைத்து பின்பு சேமிப்பதால் அவைகளில் உறக்க தன்மை ஏற்பட்டு கிழங்குகள் முளைப்பதில்லை. வேண்டியபோது நடவு செய்ய வேண்டுமானால் சேமித்த கிழங்குகளை 50 சதவித இளநீரில் 12 மணி நேரம் ஊறவைத்து பின்பு நடவு செய்ய வேண்டும். இளநீரில் உள்ள வளர்ச்சி ஊக்கிகள் உறக்கத்தை முறியடித்து கிழங்குகளை முளைக்கச் செய்கிறது.

வெள்ளைபூண்டு

பூண்டு மகசூலை அதிகரிக்க ‘கிரீன்சிட்’ என்ற வளர்ச்சி ஊக்கி பயன்படுத்தப்படுகிறது. நடவு செய்த 60 நாட்களிலிருந்து வாரம் ஒருமுiயாக 20 மி. லி. / 10 லிட்டர் என்ற அளவில் செடிகளை நன்கு நனையுமாறு தெளிப்பதால் செடிகளில் அதிக இலைகள் தோன்றி வளர்ச்சி துரிதமாகி பூண்டின் மகசூல் அதிகமாகிறது. இது இந்தோசீனா நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது.

பெரிய வெங்காயம்

நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு 50 பிபிஎம் ஜிப்ரலிக் அமில கரைசலில் வேர்களை 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு நடவு செய்வதால் ஹெக்டருக்கு 250 குவிண்டாலும், ஜிபிரலிக் அமில்தில் நனைக்காததால் ஹெக்டருக்கு 140 குவிண்டால் மட்டுமே மகசூல் பெற முடிந்தது. ஆக்ஸின் வளர்ச்சி ஊக்கியை சேர்ந்த என்.எ.எ.(நாப்தலின் அசிடிக் அமிலம்) 150 பிபிஎம். கரைசலை நாற்றுகளை நடவு செய்த பின்பு ஒரு மாதம் கழித்து தெளிப்பதால் வெங்காயத்தின் அளவும் எடையும் அதிகமாகி மகசூல் அதிகரிக்கிகறது. வெங்காயத்தின் நாற்று நடவு செய்து அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பு மாலிக் ஹைடிரசைடு 2000 பிபிஎம் தெளிப்பதால் 220 நாட்கள் வரை சேமிக்கலாம். 220 நாட்கள் சேமித்த பின்பும் சுமார் 2 சதவிதமே முளைத்திருந்தது. மேலும் பிப்ரவரி மாதம் நடவு செய்து பின்பு அறுவடை செய்யப்படும் வெங்காயம் சேமிப்பதற்கு உகந்தது.

கொத்தமல்லி

கொத்தமல்லி விதைகளை 50 பிபிஎம் ஜிபிரலிக் அமில கரைசலில் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு நீரை வடித்து விதைகளை சணல் சாக்கு பையில் கட்டி 24 மணி நேரம் அப்படியே வைத்திருந்து பின்பு விதைப்பதால் விதைகளில் முளைப்பு திறன் அதிகமாவதோடு மட்டுமல்லாமல் இளம் செடிகளில் இலை வளர்ச்சி அதிமாகி கீரையின் மகசூலும் அதிகமாகிறது.

டாக்டர் பா.இளங்கோவன்

மேலும் விபரம் பெற 98420 07125 உள்ளது.

Spread the love