புது தில்லி, ஏப்.30
கோவிட் தொற்றுக்கான மருந்து விநியோக கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசிடம் தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கோவிட் தொற்றின் 2வது அலையால் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கோவிட் தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் புது தில்லி உள்ள முக்கிய நகரங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது.
அப்போத் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் தொற்று தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசு இந்த கடினமான சூழலில் 100 சதம் தடுப்பூசிகளை வாங்கி வைக்கவில்லை தயாரிக்கவில்லை. தடுப்பூசிகளில் மத்திய அரசுக்கு ஒருவிலை, மாநில அரசுகளுக்கு ஒருவிலை என இரு விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன். என கேள்வி எழுப்பினர்.
மேலும், தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, அது தொடர்பாக இணையதளத்தில் ஏதேனும் உதவி கோரினால், அவர்களை அடக்கவோ, அவர்கள் வெளியிடும் தகவலை மறைக்கவோ கூடாது. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் ஆக்ஸிஜன் உதவிகள் கேட்பதை மாநில அரசுகள் தடுக்க கூடாது.
கோவிட் தொற்று அதிகரித்து மக்களுக்கு சிகிச்சையளிக்க இடமில்லாவிட்டால் விடுதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறந்து கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.