July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மல்பெரி நாற்றங்கால் மேலாண்மை பயிற்சி

புதுக்கோட்டை, ஜூலை 22

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா-மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மல்பெரி நாற்றங்கால் மேலாண்மை என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விவசாயிகள் இணைய வழி பயிற்சி அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் பழனியப்பா, முன்னிலையில் அன்னவாசல் வேளாண்மை விரிவாக்க மைய கூட்ட அரங்கில் நடத்தப்பட்து. பயிற்சியில் அன்னவாசல், திருமயம் மற்றும் பொன்னமராவதி வட்டாரத்தின் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

பயிற்சியில் வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கண்ணையன், கலந்து கொண்டு மல்பெரி நாற்றங்கால் மேலாண்மை தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கமளித்தார். மல்பெரிச் செடியானது வருடம் முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது. இது பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரித் தோட்டங்களும் பராமரிக்கப்படுகிறது. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்கு மிகவும் ஏற்றதாகும். ஒரு எக்டர் மல்பெரி தோட்டம் அமைக்கத் தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 20 சென்ட் (800 சதுர மீடடர்) நிலம் தேவை. பூச்சி நோய்த் தாக்காத ஆறு முதல் எட்டு முதிர்வுடைய செடியிலிருந்த விதைக் குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3-4 பருக்கள் உடைய சிறு விதைக் குச்சிகளாகவும், 15-20 செ.மீ நீளமுள்ளதாக, வெட்ட வேண்டும். வெட்டும் போது ஒவ்வொரு விதைக் குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப்பகுதியில் சாய்வாகவும் பட்டை உரியாமலும் பிளவு படாமலும் வெட்ட வேண்டும். விதைக் குச்சிகளின் வேர் விடும் திறனை அதிகரிக்க அவற்றை அசோஸ்பைரில்லம் கரைசலில் நனைத்து நடவு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் நீரில் கரைத்து அதில் விதைக் குச்சிகளின் அடிப்பாகம் நனையுமாறு 30 நிமிடம் ஊற வைத்து பின் நட வேண்டும். நாற்றாங்காலுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். குச்சிகளை நட்டது முதல் 45 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மல்பெரிச் செடியை சாதாரண (90 – 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாகவோ (75, 105 – 90 செ.மீ) நடவு மேற்கொள்ளலாம். அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களை மல்பெரி பயிருக்கு ஒரு ஆண்டிற்கு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் இட்டு இராசயன உரத் தேவையை 25 சதவிகிதம் (75 கிலோ) குறைத்துக் கொள்ளலாம். உயிர் உரங்களுடன், சணப்பு போன்ற பயிர்களை ஊடுபயிராக வளர்த்து மடக்கி விடுவதால் தழைச்சத்து, பரிந்துரையில் 50 சதவிகிதத்தை (150 கிலோ) குறைத்துக் கொள்ளலாம். பாஸ்போபாக்டீரியாபோன்ற உயிர் உரங்களை எக்டருக்கு ஆண்டிற்கு 10 கிலோ என்ற அளவில் இடும் போது மணிச்சத்து பரிந்துரையில் 25 சதவிகிதத்தை (30 கிலோ) குறைத்துக் கொள்ளலாம். மகசூலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பது களைகளே ஆகும். இதனால் சுமார் 40 சதவிகிதம் வரை இலை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை கவாத்து பின் களை நீக்கம் செய்ய வேண்டும். மல்பெரியில் ஒரு கிலோ இலை உற்பத்திக்கு சுமார் 320 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் போது சுமார் 40 சதவிகித நீரைச் சேமிக்க முடியும். தண்ணீர் சற்றே உப்புத் தன்மை உடையதாகஇருந்தாலும்சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளித்தார். பயிற்சியின் முடிவில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் நன்றியுரை உதவி தொழில் நுட்ப மேலாளர் தேவி வழங்கினார்.

Spread the love