தேனி, மே 16
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 349 கன அடியாக அதிகரித்தது. மழை தொடர்ந்து நீடித்து வருவதால் நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 506 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 130.15 அடியாக உள்ளது. பருவமழை விரைவில் தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 67.29 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகையாற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இருந்த போதும் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 67 அடிக்கு மேல் இருப்பதால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.