August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாணவ மாணவியருக்கு விதைச்சான்றுத் துறையின் பயிற்சி

நாமக்கல், ஜூலை 15

நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் நாமக்கல் PGP வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விதைச்சான்றளிப்புத் துறையின் பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டாரம், பொன்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள தரணி ரக நிலக்கடலை விதைப்பண்ணைக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.சித்திரைச்செல்வி, விதைச்சான்றுத் துறையின் பணிகள் குறித்தும், விவசாயத்தில் தரமான விதைகள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். விதைப்பண்ணையின் முக்கியத்துவம், விதைப்பண்ணை பதிவு செய்யும் முறை, அதை பராமரிக்கும் விதம், விதைப்பண்ணை வயலாய்வு குறித்து நாமக்கல் விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தார். பின்னர் மாணவ, மாணவிகள் அத்தனூர் அருகே உள்ள தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விதை சுத்திகரிப்பு முறைகள் குறித்து நேரடி விளக்கமளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் PGP வேளாண்மை கல்லூரியை சார்ந்த வேளாண்மை பட்டப்படிப்பு மற்றும் வேளாண்மை பட்டயப்படிப்பு பிரிவுகளை சார்ந்த சுமார் 150 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்பயிற்சியின்போது இராசிபுரம் வட்டாரம் உதவி விதை அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் PGP வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர்கள் புனிதா, கண்மணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இப்பயிற்சியின் மூலம் மாணவ, மாணவியர் சான்று பெற்ற தரமான விதைகளின் அவசியம் மற்றும் தரமான விதைகளின் உற்பத்தி முறைகள், அதை சான்றளிக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவாக அறிந்து கொண்டனர் என நாமக்கல், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்தார்.

Spread the love