மும்பை, ஏப்.24
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.51,500 கோடியாக உயர்த்தப்பட்ட வழிகள் மற்றும் முறைகள் முன்பணம் வரம்பு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கோவிட் தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் திறம்பட மேற்கொள்ள உதவும் வகையில் அவற்றின் சந்தையில் கடன் வாங்கும் செயல்களை சரியாக திட்டமிட்டுக் கொள்ள வசதியாக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அதுபோல, மாநிலங்களுக்கான வழிகள் மற்றும் முறைகள் முன்பண வரம்பை ரூ.51,500 கோடியாக ஆர்பிஐ சமீபத்தில் அதிகரித்தது.
வழிகள் மற்றும் முறைகள் முன்பணம் என்பது வரவு மற்றும் செலவுகளில் ஏற்படும் தற்காலிக பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசுகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வசதியாக ஆகும். உயர்த்தப்பட்ட வரம்பை மேலும் மாதங்களுக்கு ஆர்பிஐ நீட்டித்துள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கோவிட் தொற்று பாதிப்பின் தாக்கம் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.51,500 கோடியாக உயர்த்தப்பட்ட வழிகள் மற்றும் முறைகள் முன்பணம் வரம்பு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. அதன் பிறகு, கோவிட் பாதிப்பு நிலவரம் மற்றும் அதன் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வழிகள் மற்றும் முறைகள் முன்பண வரம்பு மறு ஆய்வு செய்யப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.