மானாவாரியில் பயிரிடப்படும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவமழையை மட்டுமே நம்பி உள்ளது. மானாவரிப் பயிர்களில் மகசூலை அதிகரித்திட பல தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன. அவற்றுள் ‘விதை கடினப்படுத்துதல்” என்பது முக்கியமான மற்றும் எளிதான தொழில்நுட்பமாகும். விதையை கடினப்படுத்தி விதைப்பதால் பருவ மழையை நம்பி விதைக்கப்படும் விதையின் வீரியம் மழை பொலிவு வரை குறையாமலிருக்கும். விதை கடினப்படுத்துதல் என்பது விதையினை சில மணி நேரங்கள் நீரில் ஊறவைத்து பின்னர் விதைகளை அதன் இயல்பான ஈரப்பதத்திற்கு உலரவைத்தல் ஆகும். நீருடன் சில மருந்துகளை கலந்து ஊறவைத்து விதைப்பதால் விதைகளின் வீரியம் அதிகரித்து வறட்சியைத் தாங்கி வளர்வதுடன் மிகக்குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசு+ல் அதிகரிக்கிறது.
நெல், கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை கடினப்படுத்துதல் :
20 கிராம் பொட்டாசியம் குளோரைடினை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். இக்கரைசலில் 650 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதையினை 10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப்பதம் வரும் வரை வெயிலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். சூரியகாந்தி விதைக்கு 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
சோளம் விதை கடினப்படுத்துதல்:
20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 650 மில்லி எடுத்து அதில் 1 கிலோ விதையினை 16 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும்வரை வெயிலில் உலர்த்திபின் விதைக்க வேண்டும்.
உளுந்து, பாசிப்பயறு விதை கடினப்படுத்துதல் :
1 கிராம் சிங்க் சல்பேட் மற்றும் 1 கிராம் மாங்கனீசு சல்பேட்டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 350 மில்லி எடுத்து அதில் கிலோ விதையினை 3 மணி நேரம் ஊறவைத்து பின்னர் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும்வரை வெயிலில் உலர்த்திபின் விதைக்க வேண்டும். நாம் விதைக்கப் பயன்படுத்தம் விதையின் அளவினைப் பொறுத்து கரைசலின் அளவினைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.