நிலக்கடலை பயறு வகை குடும்பத்தை சார்ந்தது, மேலும் இப்பயிர் வணிக ரீதியாகவும், எண்ணெய் உற்பத்திக்காகவும் அதிக அளவில் மானாவாரியாகவும் இறவை பாசனத்திலும் பயிரிடப்படுகிறது.
பட்டம் : மானாவாரி சாகுபடிக்கு ஆடிப்பட்டம் (ஜூன் -ஜூலை) ஏற்றது. மேலும் இறவை பயிராக கார்த்திகைப் பட்டத்திலும் (செப்டம்பர் -அக்டோபர் ) பயிரிடுகின்றனர்.
விதைநேர்த்தி : மானாவாரி நிலக்கடலையில் வறட்சியைத் தாங்க விதைகளைக் கடினப்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 55 கிலோ விதைகளை 125 மில்லி கிராம் கால்சியம் குளோரைடை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு நீரை வடிகட்டி விதைகளை ஈரமான சாக்கின் மேல் பரப்பி, அதன்மேல் மற்றொரு ஈரமான சாக்கை கொண்டு மூடி, 24 மணி நேரம் கழித்து முளைவிட்ட விதைகளைத் தனியே பிரித்தெடுத்து நிழலில் உலர வைக்கவும். பின் நன்கு முளைகட்டிய விதைகளை பிரித்தெடுத்து பின்பு விதைக்கவும். மேலும் ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடொமா விரிடி உயிரி உரத்தை கலந்து, விதை நேர்த்தி செய்து விதைத்தால் விதை மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல் போன்ற நோய்களைக கட்டுப்படுத்தலாம்.
விதைப்பு : ஏக்கருக்கு 55 கிலோ விதைகளைப் பயன்படுத்தி செடிக்குச் செடி 10 செமீ இடைவெளியும், வரிசைக்கு வரிசை 30 செமீ இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும். மேலும் உயிர் உரங்கள் ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு தலா நான்கு பாக்கெட்டும்.(800 கிராம்), 10 கிலோ தொழுஉரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும்.
ஜிப்சம் ஏக்கருக்கு 80 கிலோ அடியுரமாகவும், 80 கிலோ ஜிப்சத்தினை 40- 50ஆவது நாளில் மண ஈரத்துக்கேற்ப இரண்டாவது களை எடுக்கும் நேரத்தில் இட்டு மண் அணைக்கவும். இதனால் விழுதுகள் நன்கு இறங்கி அதிகக் காய்கள் பிடிப்பதுடன் பொக்கற்ற திரட்சியான நிலக்கடலை கிடைக்கும்.
மானாவாரி நிலக்கடலையில் ஊடு பயிராகத் துவரை, உளுந்து, தட்டைப் பயறு, ஆமணக்கு போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும். இதனால் பூச்சி நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு கூடுதல் வருமானமும் கிடைக்கும். மேலும் வறட்சியைத் தாங்கவும், அதிக காய்கள் பிடிக்கவும், ஒரு சதவிகித பொட்டாஷ் கரைசலைத் தெளிப்பு செய்ய வேண்டும். அல்லது தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலக்கடலை ரிச் என்ற நுண்னூட்ட சத்து கலவையை ஏக்கருக்கு 2.25 கிலோ வீதம் 30 மற்றும் 45 ஆம் நாள் தெளிப்பதன் மூலம் பூ மற்றும் காய் பிடிக்கும் திறனை அதிகப்படுத்தலாம். பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.