July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மானாவாரி நிலமும் மகசூல் அளிக்கும் பருத்தியும் – ஓர் பார்வை

பருத்திப் பயிரானது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் பயிரிடப்பட்டு வருகிறது. ஏனெனில் இது ஆடை உற்பத்திற்குத் தேவைப்படும் அடிப்படைப் பொருளாகும். இந்தியாவில் பருத்தி ஒரு முக்கியமான விவசாயப் பயிராக உள்ளது. பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வரும் சில பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் பெரும் பலனைக் கொடுத்து வந்துள்ளன. தற்போதும் கூட பல இடங்களில் விவசாயிகள் இந்தப் பாரம்பரியப யிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

பருத்தி சாகுபடி நிலைகள்
கரிசல் மண் மற்றும் வண்டல் மண், செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மானாவாரிப் பயிராக செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும் பயிரிடலாம். தொழுவுரம், தழைகள் ஆகியவற்றை அடியுரமாக இட்டு நிலத்தை உழுது தயார் படுத்த வேண்டும். 3 மீட்டர் இடைவெளியில் 3 செ.மீ ஆழத்தில் சிறுபாத்திகள் அமைத்து அதற்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும். ஓவ்வொரு பாத்திகளிலும் 2 மீட்டர் இடைவெளிகளில் விதைகளை நன்றாக ஊன்றி தண்ணீர் பாய்ச்சவேண்டும். மண்ணில் வளம் குறைந்த இடங்களிலும் வெயில் குறைவான இடங்களிலும் முளைக்கும் திறன் சற்றுக் குறைவாகவே இருக்கும். ஊன்றிய பத்து நாட்களுக்குள் விதைகள் முளைக்கவில்லை என்றால் வேறு விதைகளை ஊன்றலாம். இவ்வாறு செய்தால் தான் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். மாதத்திற்கு ஒரு முறை தேவையற்ற களைகளை நீக்கி தொழுவுரம் அல்லது தழைச்சத்து இடுவதனால் நல்ல சாகுபடியைப் பெறலாம். தழைச்சத்துக்கள் அதிகமாக இடும்போது வளர்ச்சியும் மிக அதிகமாக இருக்கும். இதனால் நுனிகளைக் கிள்ளிவிடும் போது பக்கக் கிளைகள் அதிகம் வளரும். இதனால் பூக்களும் காய்களும் அதிகம் காய்க்கும்.

பருத்தி ஊன்றிய 90 நாட்களுக்குப் பின்பு ஊடுபயிராக உளுந்து அல்லது தட்டைப்பயறு ஆகியவற்றைப் பயிரிடலாம். ஊன்றிய 30, 45–வது நாள்களில் நீண்ட தகடு கத்திக் கலப்பையால் உழுவது செடிகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காட்டன் பிளஸ் ஏக்கருக்கு 2.5 கி.கி. 200 லிட்டர் நீரில் கலந்து இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும். வேப்பிலைச்சாறு வேப்பங் கொட்டை சாறு தெளித்து பருத்தியைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். நன்கு புளித்தமோரில் நொதித்த ஹோமியத்தை வேப்பங் கொட்டை சாறு கலந்து தெளிக்கலாம். இம்மாதிரி இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை மேற்கொண்டால் 25% உற்பத்தி செலவு குறைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் கோடை உழவையே ஆழமாக உழுதல், விளக்குப் பொறிவைப்பது, இலைகளின் நுனிகளைக் கிள்ளுவதன் மூலமாக பூச்சிகள் இட்டுவைக்கும் முட்டைகளை அகற்றுதல், சரியான இரகங்களைத் தேர்ந்தெடுத்து நடுதல், புகையிலை சாறு தெளித்தல், மிளகாய் மற்றும் பூண்டுக் கரைசலைத் தெளித்தல், சாணம் மற்றும் ஹோமியம் கலந்த கரைசலைத் தெளித்தல், பூச்சிகளால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்தல் ஆகியமுறைகள் பருத்தியில் பூச்சிகளை மிக விரைவாகக் கட்டுப்படுத்தும். பருத்தியில் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த பேப்பரில் விளக்கெண்ணெய் அல்லது பெட்ரோல் கிரீஸ் உடன் வயலில் வைக்கவேண்டும். பருத்தியில் தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க 500 கிராம் சர்க்கரையை சமையல் எண்ணெய் கலந்து புளித்த பின் பருத்திப் பயிர்களுக்கு ஊடே வைக்க வேண்டும்.

பச்சைக் காய்ப்புழு பருத்தியை மிக அதிகமாக தாக்குகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த 250 -300 கிராம் ஊமத்தை இலைகளையும் தண்டுகளையும் 1 லிட்டர் கொதிக்கின்ற நீரில் போட்டு வைத்து பின் அந்தத் தண்ணீரை குளிர வைத்து அதில் 15 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளித்தால் பூச்சித் தாக்குதல் குறையும். பருத்தி வயலைச் சுற்றி வெண்டைக்காய் செடிகளை நட்டு வைப்பதன் மூலம் காய்ப்புழு, படைப்புழு, தத்துப்பூச்சி ஆகியவற்றிலிருந்து பருத்திப் பயிரைக் காப்பாற்றலாம்.

அரளி விதைக் காய்களை நன்றாக பொடியாக இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி வயலில் தெளிப்பதால் 70 சதவீதம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். சாதாரண உப்பை 20 – 25 கிலோ எடுத்து 10 வண்டி தொழுவுரத்தோடு கலந்து இட, பருத்தி செடிகளுக்கு பூச்சி எதிர்ப்பு சக்தி உருவாகி மகசூல் அதிகரிக்கும்.
சோளத்தை பருத்திப் பயிருடன் கலந்து நட்டால் சோளத்தை விரும்பி உண்ண வரும் பறவைகள் பருத்திச் செடிகளுக்கு வரும் பூச்சிகளைத் தின்றுவிடும். கும்முட்டிக்காய், பிரண்டைச் செடி, மஞ்சள், அரளிவிதை, வேப்பங்கொட்டை இவற்றை நன்றாக அரைத்து 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். அதனுடன் தக்கைப் பூண்டு விழுதையும் சேர்த்து துணியினால் வடித்து அதில் தண்ணீர் சேர்த்து தெளித்தால் பருத்தியைத் தாக்கும் வெட்டுப் புழுவை நன்றாகக் கட்டுப்படுத்தலாம்.

தகவல் : லூ.நிர்மலா, உதவிப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்), ஜெ.ராம்குமார், உதவிப் பேராசிரியர் (வேளாண் பூச்சியியல் துறை), சி.ராஜாபாபு, உதவிப் பேராசிரியர் (பயிர் வினையியல் துறை), வேளாண் அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், விருதுநகர்.

Spread the love