August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மானியத்தில் நுண்ணீர் பாசனக் கருவிகள் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

ஊட்டி, மே 12

சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளதாவது : நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய திட்டமான நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கில் சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைத்திட 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படும்.

மேலும், பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு அமைக்க செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000, டீசல் பம்ப் செட் மோட்டார் பம்பு செட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதம் மானியமாக ரூ.15,000க்கு மிகாமலும் வழங்கப்படும்.

விவசாய நிலத்துக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைக்க 50 சத மானியத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.10,000க்கு மிகாமலும், பாதுகாப்பு வேலிகள், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி நிறுவ அதற்காகும் செலவில் 50 சத தொகையாக பயனாளிக்கு ரூ.40,000க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும்.

அத்துடன் விவசாயிகளுக்கு பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசனம் அமைத்து மானியத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின் இந்த நீர் மேலாண்மைக்கான மானியத் தொகை முழுவதும் விவசாயிகள் சேமிப்பு கணக்குக்கு நேரடியாக விடுவிக்கப்படும். மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று, உழவர் செயலியில் பதிவு செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை தங்களது வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயனடையலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ உதகையில் 84896 04087 என்ற எண்ணிலும், குன்னூரில் 63819 63018 என்ற எண்ணிலும், கோத்தகிரியில் 94864 12544 என்ற எண்ணிலும், கூடலூரில் 89034 47744 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Spread the love