September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாரிக்கோ நிறுவனத்தின் நிகரலாபம் 4ம் காலாண்டில் 14 சதம் அதிகரிப்பு

மும்பை, மே 3

எஃப்எம்சிஜி துறையைச் சேர்ந்த மாரிக்கோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகரலாபம் 14 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாரிக்கோ நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.227 கோடி ஒட்டுமொத்த நிகரலாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு, உள்நாட்டு சந்தையில் மாரிக்கோ நிறுவனத்தின் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி கண்டதே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019-20ம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.199 கோடியுடன் ஒப்பிடுகையில் 2021ல் லாப விகிதம் 14.07 சதம் உயர்ந்துள்ளது. இதேகாலகட்டத்தில், நிறுவனத்தின் வருவாய் ரூ.1,496 கோடியிலிருந்து 34.49 சதம் அதிகரித்து ரூ.2,012 கோடியானது. ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,265 கோடியிலிருந்து 37.47 சதம் உயர்ந்து ரூ.1,739 கோடியானது.

மேலும், உள்நாட்டு சந்தையைப் பொருத்தவரையில் நிறுவனத்தின் விற்பனை 37.35 சதம் அதிகரித்து ரூ.1,574 கோடியை எட்டியது. அதேபோன்று சர்வதேச வர்த்தகத்தின் வாயிலான வருவாயும் ரூ.350 கோடியிலிருந்து 25.14 சதம் உயர்ந்து ரூ.438 கோடியானது. கடந்த 2020-21 முழு நிதியாண்டில் லாபம் 14.96 சதம் அதிகரித்து ரூ.1,199 கோடியாகவும், வருவாய் 10.02 சதம் உயர்ந்து ரூ.8,048 கோடியாகவும் ஆனது என மாரிக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love