மும்பை, ஏப்.22
கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் கொலின் சா மேலும் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான வரியை, 7.5 சதமாக குறைத்தது மற்றும் தேவைகள் அதிகரித்தது ஆகிய காரணங்களால், கடந்த மார்ச் மாதத்தில், தங்கம் இறக்குமதி, 160 டன்னாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், கடந்த, 2019-20ம் நிதியாண்டின் மார்ச் மாதத்தில், இறக்குமதி, 28.09 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில், கோவிட் தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, நவரத்தினம் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை அங்கு அதிகரித்தது. இதையடுத்தே, நாட்டின் தங்கம் இறக்குமதி அதிகரித்தது.
மேலும், திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகளாலும் உள்நாட்டில் தேவைகள் அதிகரித்தது. மத்திய அரசு இறக்குமதி வரியை பெரிய அளவில் குறைக்காவிட்டாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் இருந்தது, துறையின் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.