January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் அதானி குழுமம் நிகர லாபம் 285 சதம் உயர்வு

மும்பை, மே 5

கடந்த மார்ச் காலாண்டில் கோவிட் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் அதானி குழுமம் அதன் நிகரலாபம் உச்சம் தொட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதன் லாபம் 285 சதம் அதிகரித்து, ரூ.1,288 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.334 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாகும்.

இதே ஒருங்கிணைந்த வருவாயானது 24 சதம் அதிகரித்து ரூ.3,608 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.2,921 கோடியாக இருந்ததாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாக 5 ரூபாய் கொடுக்க, இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இதன் எபிடா விகிதம் 1020 – 1070 கோடி ரூபாயாக இருக்கலாம் என அதானி குழுமம் எதிர்பார்க்கிறது.

அதானியின் மியான்மர் திட்டத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், இது அமெரிக்க பொருளாதார தடைகளை மீறுவதாக கண்டறியப்பட்டால், மியான்மர் திட்டத்தினை கைவிடக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இதே போல அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க, ஆஸ்திரேலிய அரசும் அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு எஸ்பிஐ 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அதானி குழுமத்திற்காக கடன் வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் எஸ்பிஐ கடன் கொடுக்க கூடாது என வலுவான எதிர்ப்புகள் இருந்து வருகின்றன.

வெளிநாட்டு வணிகங்கள் மிக மோசமாக உள்ள நிலையில் கூட, உள்நாட்டில் கங்காவரம் துறைமுகம், கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் என பல ஒப்புதல்கள் அதானிக்கு சாதகமாக உள்ளன. அதோடு கோவிட் பேரிடர் காலத்திலும் இந்நிறுவன பங்குகள் பங்கு சந்தையில் அபரிதமான ஏற்றத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love