May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் எஸ்பிஐ லைஃப் நிகர லாபம் ரூ.532 கோடி ஈட்டியது

புது தில்லி, மே 4

2021 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 2021 ரூ.532 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ லைஃப் நிறுவனம் பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: எஸ்பிஐ லைஃப்பின் மொத்த வருவாய் ஜனவரி-மார்ச் காலாண்டில் பன்மடங்கு அதிகரித்து ரூ.20,897 கோடியை எட்டியுள்ளது. இது, 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5,675 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகர பிரீமியம் வருவாய் ரூ.11,863 கோடியிலிருந்து ரூ.15,556 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2019-20ம் முழு நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.1,422 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்த நிலையில் 2020-21 நிதியாண்டில் இந்த லாபம் 2 சதம் அதிகரித்து ரூ.1,456 கோடியைத் தொட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வருவாய் ரூ.43,843 கோடியிலிருந்து ரூ.82,085 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், நிகர பிரீமியம் வருவாய் ரூ.40,324 கோடியிலிருந்து ரூ.49,768 கோடியாகவும், ஒற்றை பிரீமியம் வருவாய் ரூ.6,764 கோடியிலிருந்து ரூ.10,286 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2020-21ல் புதிய வர்த்தக நடவடிக்கைகள் மூலமான பிரீமியம் வருவாய் ரூ.16,592 கோடியிலிருந்து 24 சதம் அதிகரித்து ரூ.20,624 கோடியாகவும், ஒற்றை பிரீமியம் 52 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் எஸ்பிஐ லைஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 31 நிலவரப்படி எஸ்பிஐ லைஃப் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 38 சதம் அதிகரித்து ரூ.2,20,871 கோடியை எட்டியுள்ளது.

Spread the love