August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் ஐஓசி லாபம் ரூ.8,781 கோடியை ஈட்டியது

புது தில்லி, மே 20

நாட்டின் முக்கிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐஓசி), மார்ச் காலாண்டில் ரூ.8,781 கோடி நிகரலாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஓசி தலைவர் எஸ்.எம்.வைத்யா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.8,781.30 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகும். அதேநேரம், இதற்கு முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.5,185.32 கோடி இழப்பை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்துக்கு நான்காவது காலாண்டில் பெட்ரோகெமிக்கல் வர்த்தகம் மூலமாக கிடைத்த லாப வரம்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. மார்ச் காலாண்டில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 23 சதம் அதிகரித்துள்ளது. 2020 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய் பேரலையும் எரிபொருளாக மாற்ற நிறுவனத்துக்கு கிடைத்த சுத்திகரிப்பு லாபம் 9.64 டாலர் எதிர்மறையாக இருந்த நிலையில், நடப்பாண்டில் நேர்மறை நிலைக்கு மாறி 10.6 டாலர் சுத்திகரிப்பு லாபம் கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2020-21 நிதியாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.21,836 கோடியை ஈட்டியுள்ளது.

வருவாய் ரூ.5,66,354 கோடியிலிருந்து ரூ.5,14,890 கோடியாக குறைந்துள்ளது.

Spread the love