மும்பை, மே 11
மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லாபம் 78 சதம் அதிகரித்து ரூ.128 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய 2019-20ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலக்கட்டத்தில் இவ்வங்கி ஈட்டிய லாபம் ரூ.78 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,576 கோடியிலிருந்து ரூ.4,834 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் பங்கு சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
மார்ச் 31ம் தேதி நிலவரப்டி மொத்த வாராக் கடன் விகிதம் 2.60 சதத்திலிருந்து 4.15 சதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 0.94 சதத்திலிருந்து 1.86 சதமாக உயர்ந்துள்ளது.
2020-21 முழு நிதியாண்டில் வங்கி முன்னேற்ற பாதைக்கு திரும்பி ரூ.452 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேநேரம், இதற்கு முந்தைய நிதியாண்டில் வங்கி ரூ.2,864 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கணக்கீட்டு நிதியாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.18,029.7 கோடியிலிருந்து ரூ.18,221.5 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.