June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் ஐடிபிஐ வங்கி நிகர லாபம் ரூ.1,359 கோடி ஈட்டியது

புது தில்லி, மே 5

எல்ஐசி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடிபிஐ வங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லாபப் பாதையில் அடியயடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ஐடிபிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21வது நிதியாண்டில் ஐடிபிஐ வங்கி நிகர லாபமாக ரூ.1,359 கோடியை ஈட்டியுள்ளது. அதே நேரம், கடந்த 2019-20ம் நிதியாண்டில் வங்கிக்கு ரூ.12,887 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் வங்கிக்கு கிடைத்த நிகர லாபம் அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.135 கோடியிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து ரூ.512 கோடியை எட்டியது.

மேலும், நான்காவது காலாண்டில் வருவாய் ரூ.6,924.94 கோடியிலிருந்து ரூ.6,969.59 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம், 2020-21 முழு நிதியாண்டில் வங்கியின் வருவாய் ரூ.25,295 கோடியிலிருந்து ரூ.24,557 கோடியாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 27.53 சதத்திலிருந்து 22.37 சதமாக சரிந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 4.19 சதத்திலிருந்து 1.97 சதமாக சரிந்துள்ளதாக ஐடிபிஐ வங்கி அந்த செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love