July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் நெஸ்லே லாபம் 15 சதம் உயர்வு

புது தில்லி, ஏப்.22

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் முன்னணி நுகர்பொருள்கள் துறையைச் சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 14.62 சதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெஸ்லே நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நெஸ்லே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளின் விற்பனை அளவு 2021 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலண்டில் சிறப்பான அளவில் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டது. இந்நிலையில், நிறுவனத்தின் விற்பனை அக்காலாண்டில் ரூ.3,600.20 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான ரூ.3,305.78 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.9 சதம் அதிகமாகும்.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.525.43 கோடியிலிருந்து 14.62 சதம் உயர்ந்து ரூ.602.265 கோடியைத் தொட்டது. நெஸ்லே இந்தியாவின் நடப்பாண்டு மார்ச் காலாண்டு உள்நாட்டு விற்பனை 2020 ஜனவரி-மார்ச் காலகட்ட அளவான ரூ.3,124.23 கோடியிலிருந்து 10.17 சதம் உயர்ந்து ரூ.3,442.03 கோடியானது.

அதேநேரம், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி ரூ.181.55 கோடியிலிருந்து 12.9 சதம் குறைந்து ரூ.158.17 கோடியானது. இணைய வழியிலான வர்த்தகத்தின் மூலம் விற்பனை 66 சதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது உள்நாட்டு விற்பனையில் 3.8 சத பங்களிப்பை வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் நெஸ்லே இந்தியாவின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.2,664.27 கோடியிலிருந்து 6.16 சதம் உயர்ந்து ரூ.2,828.61 கோடியை எட்டியுள்ளதாக நெஸ்லே இந்தியா தெரிவித்துள்ளது.

Spread the love