August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாற்றுப்பயிராக முருங்கை லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்

திருப்பூர், மே 15

குறைவான பராமரிப்பு, நிறைவான லாபம் என்பதால் விவசாயிகள் மாற்றுப்பயிராக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதிகளில், சிக்கனமான பாசனநீர் வினியோகம், குறைந்த பராமரிப்பு ஆகியவற்றில் பலன் தரும் பயிர்களில், முருங்கை சாகுபடி முக்கியமானதாக உள்ளது. மேலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வாகவும், கூடுதல் லாபம் உள்ளதாலும் பெரும்பாலான விவசாயிகள் இச்சாகுபடியை தேர்வு செய்கின்றனர். விதைத்து 10 நாட்களுக்குள், செடிகள் முளைத்து விடும். சிறிது வளர்ந்த பின்பு, கொழுந்து இலைகளை கிள்ளி விட வேண்டும். இதனால் இதன் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். நான்கு மாதங்களுக்குப்பின் பூக்க ஆரம்பித்து, ஆறு மாதங்களுக்குப் பின்பு காய்கள் பறிக்கத்தொடங்கலாம். தொடர்ந்து, 180 நாட்கள் வரை தொடர்ந்து காய்களை அறுவடை செய்யலாம்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது : ஒரு ஆண்டுக்கு, ஒரு மரத்தில், 200 முதல் 300 காய்கள் வரை அதாவது, 25 முதல் 35 கிலோ வரை மகசூல் கிடைக்கும். தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு இந்த மரங்கள் பலன் தரும். பின்பு அந்த மரங்களை அகற்றி விட்டு, புதிய நடவு செய்யலாம். முருங்கை சாகுபடியில் அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதில்லை. உரம், இடுபொருள் செலவு குறைவு தான். ஆண்டு முழுவதும் தேவை உள்ளதால், நிரந்தரமான வருவாயை முருங்கை வழங்குகிறது என தெரிவித்தனர்.

Spread the love