புது தில்லி, ஏப்.23
கடந்த நிதியாண்டில், மின் வாகனங்கள் விற்பனை, 20 சதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக, மின் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, எஸ்எம்இவி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து, எஸ்எம்இவி தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் கடந்த நிதியாண்டில், 2.37 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டில் விற்பனை, 2.96 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு சக்கர மின்சார வாகன விற்பனையை பொறுத்தவரை, 6 சதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 88,378 ஆக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது, 1.41 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும், நான்கு சக்கர வாகன விற்பனை, 53 சதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டு துவங்குவதற்கு முன், நல்ல நம்பிக்கையுடன் இருந்தோம் என்றும், ஆனால், பல்வேறு காரணங்களால் விற்பனை பாதிக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக இரு சக்கர, மூன்று சக்கர விற்பனை சரிந்துவிட்டது என தெரிவித்துள்ளது. இருப்பினும், வரும் ஆண்டுகளில் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில், வலுவான சார்ஜிங் கட்டமைப்பை நாட்டில் ஏற்படுத்த இயலும் எனக் கருதுகிறோம். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இக்கட்டமைப்பை ஏற்படுத்த முன்வந்துள்ளன. இவ்வாறு எஸ்எம்இவி தெரிவித்துள்ளது.