September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மீண்டும் விமான சேவையை தொடங்குகிறது ஜெட் ஏர்வேஸ்

மும்பை, செப்.14

நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு சேவையை ஸ்திரப்படுத்திய பிறகு வெளிநாட்டு சேவை தொடங்கப்படும் என்று தெரிகிறது. இத் தகவலை ஜலான் கல்ராக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முதலில் உள்நாட்டு விமான சேவை டெல்லி-மும்பை இடையே இயக்கப்படும் என்றும், அத்துடன் நிறுவனத்தின் தலைமையகம் மும்பைக்கு பதில் இனி தில்லியிலிருந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செயல்படுத்துவது குறித்து ஜலான் கல்ராக் குழுமம் அளித்த சீரமைப்பு திட்டத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் தற்போது பிரகாசமடைந்துள்ளன. இது குறித்து, ஜலான் கல்ராக் குழுமத்தின் தலைமை உறுப்பினரான முராரி லால் ஜலான் வெளியிட்ட அறிக்கையில், ஜெட் ஏர்வேஸ் 2.0 மீண்டும் தனது சேவையை அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். அதேபோல வெளிநாட்டு சேவை மூன்றாவது அல்லது நான்காம் காலாண்டில் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கடன் சுமை காரணமாக 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Spread the love