June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மூலிகைக்கும் ஏற்றதே வீட்டுத்தோட்டம்!

நமது முன்னோர்கள் பல்லாண்டு காலமாக மூலிகைகளின் பண்பை தெரிந்து பயன்படுத்தி எளிதில் நலம்பெற உதவும் உத்திகளை கையாண்டு வந்தனர். இன்று நம்மைச்சுற்றி பல மூலிகைகள் வளர்ந்திருந்தாலும் நமக்கு பயன்தெரியாது அதனால் அவற்றினை பயன்படுத்துவதில்லை. மேலும் முறையாக வளர்த்து தினமும் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டிய அற்புத மூலிகைகள் பல உள்ளன. வீட்டைச்சுற்றி இடமிருப்பின் நிலத்திலோ அல்லது தோட்டமிருப்பின் ஒரு சிறுபகுதியை ஒதுக்கி மூலிகைப்பூங்கா அமைத்தும் ஊரிலுள்ள எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கும்.

வீட்டில் வேலிப்பகுதிகளில்கூட படரவிட சில மூலிகைகள் உதவும். நீர்நிலை இருப்பின் அதில் வளர்த்தும் பயன்படுத்த பல மூலிகைகள் உள்ளன. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நமது இன்சுலின் செடி இலைகளை தினமும் உண்ணலாம். செம்பருத்தி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகலாம். நீரெரிச்சல் தீரும். செம்பருத்திப் பூவை உலர்த்தி பொடித்து பாலில் காலை, மாலை பருகலாம். இதயபலவீனம், மார்புவலி குணமாகும். செம்பருத்திப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சித் தடவி முடியை பேணலாம்.

கீழாநெல்லி இலையில் உப்புசேர்த்து அரைத்துதடவிக் குளிக்க சொறி சிரங்கு நமைச்சல் தீரும். கண்பார்வைக்கும் நல்லது. இரத்த சர்க்கரையை சமன்படுத்திட சிறுகுறிஞ்சான் செடி இலைகள் உதவும். இதன் வேர், காய்ச்சல், இருமல், காசம் தீர்க்க உதவும்.

வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்டநாள் கட்டிவர யானைக்கால், விரைவாதம், நெறிக்கட்டி, அறையாப்பு, கண்டமாலை தீரும். இலையை உலர்த்தி பொடிசெய்து 5 அரிசி எடை காலை, மாலை நெய்யில் உட்கொள்ளுவதால், வாதம், வாயு, அண்டபித்தம், யானைக்கால், குப்பம், நெறிக்கட்டி, கண்டமாலை மேகரணம், சூதகத்தட்டு போக்கும் மூளை பலத்தையும் அறுசுவையையும் தரும்.

ஆடாதோடா இலைச்சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை தந்தால் நுரையீரல் இரத்தவாந்தி, கோழை மிகுந்து மூச்சுதிணறல், இருமல், இரத்தம் கலந்த கோழைவருதல் குணமாகும். இவை மட்டுமல்ல முடக்கறுத்தான், தூதுவளை, நந்தியாவட்டை, துளசி, அருகம்புல், அம்மான்பச்சரிசி, நித்யகல்யாணி, அவுரி நன்னாரி, பொன்னாங்கண்ணி முதலிய பல தாவரங்களை நம் தோட்டத்தில் தரைப்பகுதியிலோ அல்லது மாடித் தோட்டத்திலோ அல்லது செங்குத்துத் தோட்டத்திலோ நட்டு நோயற்ற வாழ்வு பெறலாம்.

மேலும் விபரம் பெற கைபேசி எண் 98420 01725 தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு : டாக்டர்.பா.இளங்கோவன், பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி-15

Spread the love