October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

சேலம், அக்.13

கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 29,000 கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 19,068 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 28,394 கன அடியாக வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. கால்வாயில் 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 82.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 85.17 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 2 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Spread the love