சேலம், மே 18
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1994 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீருக்காக விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் திறப்பை விட, தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று 97.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.88 அடியாக உயர்ந்தது.
சில நாட்களாக அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்மட்டம் உயர தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது கோடை காலம் என்பதாலும், வெயில் தாக்கம் மேட்டூர் பகுதியில் அதிகமாகவே இருக்கிறது. இதனால், விவசாயிகள் பகல் நேரத்தினை தவிர்த்து, மாலை நேரத்தில் வெயில் தாக்கம் குறைந்ததும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.