January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மேலும் 4 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை

புது தில்லி, ஏப்.22

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்தாவது தவணையாக 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இதுவரை 14 ரஃபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் 4 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பிரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விமானப் படை தளபதி, இந்தியாவுக்கு அடுத்தத் தவணையாக அனுப்பப்பட இருக்கும் ரஃபேல் போர் விமானங்களைப் பார்வையிட்டார். இடையே நிறுத்தமின்றி இந்தியா வந்தடைய உள்ள இந்த 4 விமானங்களுக்கு, நடு வானிலேயே பிரான்ஸ் விமானப்படை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவிட் அச்சுறுத்தலுக்கு இடையே குறித்த நேரத்தில் இந்தியாவிடம் விமானங்களை ஒப்படைத்து வருவதற்கும், விமானிகளுக்கு பயிற்சியை அளித்து வருவதற்கும் பிரான்ஸ் நிறுவனத்துக்கும், பிரான்ஸ் விமானப் படைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த 4 ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா வந்தடைந்துள்ளதாகவும், இந்த விமானங்கள் வந்து சேர்வதன் மூலம், இந்தியா வசம் இருக்கும் அதிநவீன ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரிக்க உள்ளது.

Spread the love