July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மேலூர் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கி சாகுபடி செய்ய மானியம்

வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு அழைப்பு

மதுரை, ஜூலை 21

மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் கீழ் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 2021-22ம் ஆண்டிற்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நீண்டகால தரிசு நிலங்களைப் பண்படுத்தி சாகுபடிக்கு ஏற்ற விளைநிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

மேலூர் வட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் தரிசாக உள்ள நீண்ட கால இதர தரிசு நிலங்களைக் கண்டறிந்து சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக ஒரு தொகுப்பிற்கு 25 ஏக்கர் (ஒரு கிராமத்தில் குறைந்தது 25 ஏக்கராவது தரிசு நிலம் இருக்க வேண்டும்) வீதம் 5 தொகுப்புகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு (50 ஹெக்டேர்) தற்போது தொகுப்பு கிராமங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஜேசிபி மூலம் முட்புதர்களை அகற்றுதல், அகற்றப்பட்ட முட்புதர்களை அப்புறப்படுத்தி நிலத்தினை சுத்தப்படுத்துதல் மற்றும் சமப்படுத்துதல், இருமுறை உழவு செய்தல், உழுத நிலங்களில் தொழுஉரம் இடுதல், வேலையாட்கள் கூலி மற்றும் பயறு வகைப்பயிர்கள் எண்ணெய் வித்துப்பயிர் மற்றும் சிறுதானியப்பயிர்கள், விதைப்பு செய்தல் ஆகிய பணிகளை தங்களது சொந்த செலவில் மேற்கொண்டு அதற்கான பட்டியல்களை மேலூர் வட்டா வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பிறகு 50 சதவிகித மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

எனவே மேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாயப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது நாட்டின் உணவு உற்பத்தியினைப் பெருக்குவதற்கு உறுதுணையாக இருப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்தினையும் இதன் மூலம் உயர்த்திக் கொள்ளுமாறு மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.செல்வி கேட்டுக் கொண்டார். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமார் : 98940 16665 மற்றும் துணை வேளாண்மை அலுவலர் தனலட்சுமி : 94868 24431 என்ற கைபேசி எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

Spread the love