June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மே 1ல் இறைச்சி, மீன் கடைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஏப்.27

மே 1ல் சனிக்கிழமை அன்று இறைச்சி, மீன் கடைகளுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. முந்தைய தினமான சனிக்கிழமை மீன் சந்தைகள், மீன் விற்பனைக் கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றில் கடுமையான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

அப்போது, சமூக இடைவெளி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிட் தொற்றாளர்ளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளில் மீன் சந்தைகள், கடைகள், இறைச்சி விற்பனைக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்றும், அவை அனைத்தும் சனிக்கிழமைகளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்துடன், சனிக்கிழமையும் மூடப்படுவதால், மீன், இறைச்சிக் கடைகள் இனி வாரத்தில் இரண்டு நாள்கள் செயல்படாது.

ஏழு மாதங்களுக்குப் பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு முந்தைய தினமான சனிக்கிழமை சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் மீன், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பலரும் முகக்கவசம், சமூக இடைவெளியை மறந்து மீன், இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சனிக்கிழமையும் அந்தக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love