August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மோட்டார் வாகனங்களின் பதிவு 30 சதம் சரிவு: எஃப்ஏடிஏ தகவல்

புது தில்லி, மே 11

கடந்த 2020-21ம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 29.85 சதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த அளவில் 1,52,71,519 மோட்டார் வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த ஓராண்டு காலத்தில் புதிய வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததையடுத்து மொத்த வாகன பதிவு எண்ணிக்கை 30 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக கருதப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் டிராக்டர் தவிர்த்து, இருசக்கரம், மூன்று சக்கரம், வர்த்தக வாகனம், பயணிகள் வாகனம் ஆகியவற்றின் பதிவுகளின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் முறையே 31.51 சதம், 64.12 சதம், 49.05 சதம் மற்றும் 13.96 சதம் சரிவை சந்தித்துள்ளன. கடந்த 2012-13-ஆம் நிதியாண்டுக்குப் பிறகு இவற்றின் விற்பனை இந்த அளவுக்கு குறைவது இதுவே முதல் முறையாகும் என தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் வாகன பதிவு 27,73,514 என்ற எண்ணிக்கையிலிருந்து 23,86,316-ஆக சரிந்துள்ளது. அதேபோன்று, இருசக்கர வாகன பதிவும் 1,68,38,965-லிருந்து 1,15,33,336-ஆனது. மூன்று சக்கர வாகன பதிவு 7,19,594-லிருந்து 2,58,174-ஆகவும், வர்த்தக வாகன பதிவு 8,81,114-லிருந்து 4,48,914-ஆகவும் குறைந்துள்ளன. இருப்பினும், டிராக்டர் விற்பனை மட்டும் கடந்த நிதியாண்டில் 5,55,315-என்ற எண்ணிக்கையிலிருந்து 6,44,779-ஆக உயர்ந்துள்ளது என எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

Spread the love