மும்பை, மே 15
இந்தியாவில் அடுத்தடுத்து வங்கிகள் வர்த்தகம் செய்வதற்கும், மக்களுக்குச் சேவை அளிப்பதற்குமான தகுதியை இழந்து வருகிறது என்பதை உண்மையாக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரிசர்வ் வங்கி, மேற்கு வங்க மாநிலத்தின் பாக்நன் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் நிதிநிலை பல மாதங்களாக ஆய்வு செய்து வருகிறது, இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிலேயே பல நாட்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில் தான் இக்கூட்டுறவு வங்கியிடம் மக்களுக்குத் தங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்குக் கூட நிதி ஆதாரங்கள் இல்லை என்றும், புதிய வருமானம் ஈட்டுவதற்கான திறனும் வாய்ப்புகள் இல்லை என்பதால் ரிசர்வ் வங்கி யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் உரிமம் ரத்துசெய்யப்பட்டு உள்ளதால் மக்கள் பயப்படத் தேவையில்லை, காரணம் Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) கீழ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட் வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் பணம் முழுமையாகக் கிடைக்கும்.
வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ள காரணத்தால் யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியால் இனி எவ்விதமான வங்கி சேவைகளும் அளிக்க முடியாது. குறிப்பாகக் கடன் அளிக்கவோ, அல்லது டெபாசிட் வழங்கவோ முடியாது என தெரியவந்துள்ளது.