இந்தியாவில் டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் OTT தளங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகிவரும் நிலையில் அமேசான் நிறுவனமும் புதிய அறிமுகம் ஒன்றைச் செய்துள்ளது.
இந்தியாவில் இ-காமர்ஸ், டிஜிட்டல், கிளவுட் எனப் பல பிரிவுகளில் வர்த்தகம் செய்யும் அமேசான் தற்போது புதிதாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவையை அமேசான் மினிடிவி என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சேவை முற்றிலும் இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் மினிடிவி சேவையின் கீழ் வெப் சீரியஸ், காமெடி, நாடகம், டெக், லைப்ஸ்டைல், உணவு என அனைத்து வகையான வீடியோக்களும் இருக்கும், அனைத்தையும் தாண்டி அமேசான் இந்தச் சேவையை அனைவருக்கும் இலவசமாக அளிக்கிறது.
இத்தளத்தின் மூலம் யூடியூப், பேஸ்புக் போன்று விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது அமேசான். இதனால் கன்டென்ட் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் அமேசான் மினிடிவி பெரும் வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் மினிடிவி தற்போது அமேசான் ஆண்டிராய்டு ஆப்-ல் மட்டுமே உள்ளது. விரைவில் ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும் தனிச் செயலியாக இருக்கும் அறிமுகமாகும் என அமேசான் தெரிவித்துள்ளது.
தற்போது அமேசான் ஷாப்பிங் செயலியின் முதல் பக்கத்தில் கீழே அமேசான் மினிடிவி-க்கான பேனர் உள்ளது. இதைக் கிளிக் செய்த உடன் புதிய இணையப் பக்கத்திற்குச் செல்லும், அதில் பிரபலமாக ஷோ, வீடியோ ஆகியவை இருக்கும்.
அமேசான் மினிடிவி என்பது அமேசான் ப்ரைம் போன்று மெம்பர்ஷிப் கொண்டு இயங்குவது இல்லை, முற்றிலும் இலவசம் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.