January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.1.60 கோடிக்கு தேங்காய் வர்த்தகம் பாதிப்பு

சேலம், மே 15

கரோனா முழு ஊரடங்கு காரணமாக, கடந்த நான்கு நாளில், ரூ.1.60 கோடிக்கு தேங்காய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள, 15 மண்டிகள் மூலம், தினமும், ரூ.40 லட்சம் வரை வர்த்தகம் நடக்கும். மூட்டைக்கு, 80 காய் வீதம், 300 மூட்டைகளுடன், ஒரு லாரியில் ஏறக்குறைய, 25,000 காய்கள் வரை ஏற்றப்பட்டு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீஹார், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். சீசன் காலத்தில் தினமும், 20 லாரிகளில், 5 லட்சம் காய்கள் வரை ஏற்றுமதி செய்யப்படும். ஒரு லாரிக்கு ரூ.2 லட்சத்திற்கான வர்த்தகம் நடக்கும். இது தவிர, வாடகை, டீசல் உள்ளிட்ட செலவு ஏற்படுகிறது. இத்தொழிலை நம்பி, விவசாயிகள், வியாபாரிகள், மரமேறும் தொழிலாளர் உள்பட, சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவால், முழு ஊரடங்கு உள்ளதால் கோவில் விழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. கரோனா அச்சத்தால், காயை தரம் பிரித்து, மட்டையை உரித்து, லாரிகளில் ஏற்றும் தொழிலாளர்கள் கூட, வேலைக்கு வரவில்லை. வடமாநிலங்களுக்கு தேங்காய் மூட்டைகளை ஏற்றிச்செல்ல, டிரைவர்களும் தயங்குகின்றனர். இதனால், தேங்காய் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலையும் சரிந்துள்ளது. கடந்த நான்கு நாளாக தேங்காய்களை ஏற்றுமதி செய்யாததால், தினமும், ரூ.40 லட்சம் வீதம், சுமார் ரூ.1.60 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Spread the love