October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.1,000 கோடியில் விரிவாக்கத் திட்டம் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமம் தகவல்

மும்பை, அக்.9

மும்பையில் உள்ள ஆதித்யா ஜோத் மருத்துவமனையானது சமீபத்தில் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் அகர்வால்ஸ் மருத்துவமனையின் 100வது கிளையாக அது உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கண் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ரூ.1,000 கோடி மதிப்பிலான விரிவாக்க செயல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அகர்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளதாவது:

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகள் தற்போது இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 100 கிளைகளைக் கொண்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் மற்றும் 4,000 பணியாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். இதுவரை 1.2 கோடி பேருக்கும் அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதித்ய ஜோத் மருத்துவமனை தற்போது டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் ஒரு அங்கமாக இணைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். அடுத்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிரம் முழுவதும் 20 கண் மருத்துவமனைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்களை அமைக்க ரூ. 300 கோடிக்கு மேல் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 200 மருத்துவமனைகள் மற்றும் 500 சிகிச்சை மையங்களை உருவாக்க ரூ.1,000 கோடியில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.

Spread the love