October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.5800 கோடிக்கு சோலார் பவர் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியது

மும்பை, அக்.11

நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி நிறுவனமான ஆர்ஈசி சோலர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் குழுமம் விலைக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது: ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடட் நிறுவனம், சீனா நேசனல் ப்ளூஸ்டார் குழுமத்திடம் இருந்து சுமார் ரூ.5800 கோடிக்கு அந்த நிறுவனத்தை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் முகேஷ் அம்பானி, ஆர்ஈசி நிறுவனத்தை கையகப்படுத்தியதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ஆர் ஈ சி நிறுவனத்தில் உலகம் முழுவதும் 1300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பரிவர்த்தனை முறையாக நிறைவடைந்த பின், அவர்கள் ரிலையன்ஸ் குழும பணியாளர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அடுத்த 3 ஆண்டுகளில், ரூ.75 ஆயிரம் கோடி செலவில் குஜராத்தின் ஜாம்நகரில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் 4 ஆலைகளை ஏற்படுத்திட ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜாம்நகரில் 5000 ஏக்கரில் மெகா கட்டுமானத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கட்டுமானம் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வளாகமாக கட்டப்பட்டு வருகிறது.

1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர் ஈ சி நிறுவனம், ஆண்டுக்கு சராசரியாக 1800 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யும் திறனுள்ள சோலார் பேனல்களை தயாரித்து வருகிறது. இதுவரை பத்தாயிரம் மெகாவாட் திறனுள்ள சோலார் பேனல்களை உலகம் முழுவதும் அமைத்துள்ளது.

Spread the love