புது தில்லி, ஏப்.20
ரெம்டெசிவிர் மருந்து, உயிர் காக்கும் மருந்து அல்ல என்பதால், அதை கோவிட் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு அவசியமின்றி தரக்கூடாது என, மத்திய அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: கோவிட் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தும், ரெம்டெசிவிர் ஊசி மருந்திற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. கள்ளச் சந்தை யில், அந்த மருந்தின் விலையும், தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மருத்துவமனையில், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் த்றகொரோனா நோயாளிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மட்டுமே ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அது ஒரு சோதனைக்கான ஆய்வு மருந்து தானே தவிர, உயிர் காக்கும் மருந்து அல்ல. அந்த மருந்தால், இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கவில்லை.
எனவே, மருத்துவமனையில், ஆக்சிஜன் உதவியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் மட்டுமே, ரெம்டெசிவிர் வழங்கலாம். வீட்டுச்சூழலில் இருப்போர் கண்டிப்பாக போட்டுக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா, ரெம்டெசிவிர், இறப்பை தடுக்கும், மாய மருந்து அல்ல. கோவிட் தொற்றை எதிர்க்கும் திறனுள்ள மருந்து இல்லாததால், அது பயன்படுத்தப்படுகிறது. அதை, சாதாரண நோய் எதிர்ப்பு மருந்தாக உபயோகிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.